பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, March 24, 2017

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு

பெற்றோர்கள் சம்பந்தமாக நபிமொழிகளின் தொகுப்பு
وَبَلَغَ أَرْبَعِينَ سَنَةً قَالَ رَبِّ أَوْزِعْنِي أَنْ أَشْكُرَ نِعْمَتَكَ الَّتِي أَنْعَمْتَ عَلَيَّ وَعَلَى وَالِدَيَّ وَأَنْ أَعْمَلَ صَالِحًا تَرْضَاهُ وَأَصْلِحْ لِي فِي ذُرِّيَّتِي إِنِّي تُبْتُ إِلَيْكَ وَإِنِّي مِنَ الْمُسْلِمِينَ (15)
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும்போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
(அல்குர்ஆன் 46 : 15 )
அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், '' நான் நபி (ஸல்) அவர்களிடம் '' அல்லாஹ்வின் நபியே நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது?'' என்று கூறினார்கள். ''அடுத்து எது? அல்லாஹ்வின் நபியே என்று கேட்டேன். அதற்கு ''தாய் தந்தையருக்கு நன்மை புரிவது'' என்றார்கள். ''அடுத்தது எது? அல்லாஹ்வின் நபியே'' என்று கேட்டபோது, ''அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது'' என்றார்கள்.
நூல் : முஸ்லிம் (138)
உலக மக்களிலேயே அழகிய முறையில் நட்பு கொள்வதற்கு முதல் தகுதியானவர்கள் பெற்றோர்கள்தான்
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து '' நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் தகுதியானவர் யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய் என்றார்கள்''. அவர் ''பிறகு யார்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாய்'' என்றார்கள். அவர், ''பிறகு யார்?'' என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''பிறகு, உன் தந்தை '' என்றார்கள்.
அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)  நூல் : புகாரி (5971)
பெற்றோருக்கு பணிவிடை செய்தல் மாபெரும் ஜிஹாத் ஆகும்
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அறப்போரில் கலந்து கொள்ள அனுமதி கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ''உன் தாயும், தந்தையும் உயிருடன் இருக்கிறார்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், ''ஆம் (உயிருடனிருக்கின்றனர்)'' என்று பதிலளித்தார்.  நபி (ஸல்) அவர்கள் ''அப்படியென்றால், அவ்விருவருக்கும் பணிவிடைசெய்து உதவி புரிவதற்காக ஜிஹாத் செய் (உழை)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) நூல் : புகாரி (3004)
பெற்றோர்களுக்கு பணிவிடை செய்வது
"என்னைத் தவிர வேறு யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்!'' என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி "சீ' எனக் கூறாதே! அவ்விருவரையும் விரட்டாதே! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறு!
 அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக! "சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!'' என்றுகேட்பீராக!
(அல்குர்ஆள் 17 : 23 , 24)
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
(அல் குர்ஆன் 31 : 14)
பெற்றோருக்காகச் செலவிடுதல்
தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். "நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும் (செலவிட வேண்டும்.) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன்'' எனக் கூறுவீராக!
(அல் குர்ஆன் 2 : 215 )
நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் நின்றவர்களாக மக்களுக்கு உரையாற்றும் போது ''கொடுப்பவரின் கரம்தான் உயர்ந்ததாகும். உன்னுடைய குடும்பத்தவர்களாகிய உன்னுடைய தாய், உன்னுடைய தந்தை, உன்னுடைய சகோதரி, உன்னுடைய சகோதரன் பிறகு உனக்கு நெருக்கமானவர்கள் இவர்களிடமிருந்து நீ ஆரம்பம் செய்'' என்று கூறினார்கள்
அறிவிப்பவர் : தாரிக் (ரலி) நூல் : நஸாயீ (2485)
மரணித்து விட்ட பெற்றோருக்காக தர்மம் செய்தல்
பனூ சாயிதா குலத்தைச் சார்ந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் வெளியூர் சென்றிருந்த போது அவர்களது தாயார் இறந்துவிட்டார். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து , '' அல்லாஹ்வின் தூதரே நான் வெளியே சென்றிருந்தபோது என் தாயார் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஏதேனும் தர்மம் செய்தால் அவருக்கு அது பலனளிக்குமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''ஆம் (பலனளிக்கும்)'' என்று கூறினார்கள். சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், எனது மிக்ராஃப் (எனும்) தோட்டத்தை அவர்களுக்காக தர்மம் செய்து விடுகிறேன் என்பதற்குத் தங்களை நான் சாட்சியாக்குகிறேன்,'' என்று கூறினார்கள்.            
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)  நூல் : புகாரி (2762)
பெற்றோர்களின் மூலம் ஏற்பட்ட உறவை அவர்களின் மரணத்திற்குப் பிறகும் இணைத்து வாழுதல்
மக்காவிற்கு செல்கின்ற வழியில் ஒரு கிராம வாசி இப்னு உமர் (ரலி) அவர்களைச் சந்தித்தார். இப்னு உமர் (ரலி) அவர்கள் அவருக்கு ஸலாம் கூறி அவரை தன்னுடைய கழுதையில் ஏற்றினார்கள். தன்னுடைய தலையில் இருந்த தலைப்பாகையை அவருக்கு வழங்கினார்கள். (இதைக்கண்ட நாங்கள்) அல்லாஹ் உங்களை நன்றாக்குவானாக. இவர்கள் கிராமவாசிகள் கொஞ்சத்தையும் கூட பொருந்திக்கொள்வார்களே (அவர்களிடம் ஏன் நீங்கள் இவ்வாறு மிகுதியாக நடந்து கொள்ளவேண்டும்) என்று கேட்டோம். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் '' இவருடைய தந்தை (என்னுடைய தந்தையாகிய) உமர் (ரலி) அவர்களுக்கு நண்பராக இருந்தார். (தந்தைக்கு செய்யும்) பணிவிடைகளிலேயே மிகச் சிறந்தது மகன் தன் தந்தையின் நண்பரின் குடும்பத்தார்களை இணைத்து வாழ்வதுதான் என்று நபியவர்கள் கூற நான் கேட்டிருக்கிறேன்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு தீனார், நூல் : முஸ்லிம் (4629)
பெற்றோருக்கு செய்யும் பணிவிடைகள் இறையுதவியைப் பெற்றுத் தரும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ''(முன்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது, அவர்கள் மலையில் உள்ள  குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகை வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள் , ''நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்'' என்றனர்.
 அவர்களில் ஒருவர், ''இறைவா எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பேன்.  ஓர் இரவு தாமதமாக நான் வந்தேன். பெற்றோர் உறங்கிவிட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது இறைவா. நான் இதை உனது திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து '' எனக் கூறினார். அவ்வாறு (பாறை விலகி) இடைவெளி உண்டானது.                    
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : புகாரி (2215)
பெற்றோர்களை நோவினை செய்வது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் '' பெற்றெடுத்த தாய்மார்களுக்கு துன்பம் தருவதை நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு ஹராமானதாக (விலக்கப்பட்டதாக) ஆக்கியுள்ளான்''
அறிவிப்பவர் : முகீரா பின் ஸுஹஃபா (ரலி) நூல் : புகாரி (2408)
'' தனக்கு அமுதூட்டியவர்களான (பெற்றோர்களை) சீரழிப்பதே ஒருவன் (நரகம்) செல்வதற்கு போதுமான பாவமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு பின் ஆஸ் (ரலி)
நூல் : அஹ்மத் ( 6208)
நபி (ஸல்) அவர்களிடம் பெரும்பாவங்கள் பற்றி கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''அல்லாஹ்வுக்கு இணை வைத்தல், பெற்றோருக்கு துன்பம் கொடுப்பது, தற்கொலை செய்து கொள்வது, பொய்சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்)'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : புகாரி (2653)
பெற்றோர்களை சபிப்பது பெரும்பாவமாகும்
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : '' தன் பெற்றோரை சபிப்பவனை அல்லாஹ் சபித்து விட்டான். அல்லாஹ் அல்லாதவருக்கு அறுத்துப் பலியிட்டவனை அல்லாஹ் சபித்துவிட்டான். பித்அத் செய்பவனுக்கு அடைக்கலம் தருபவனை அல்லாஹ் சபித்துவிட்டான். நிலத்தின் எல்லைக்காக (வைக்கப்பட்ட) அடையாளக்கல்லை மாற்றியவனை  அல்லாஹ் சபித்துவிட்டான் ''
அறிவிப்பவர் : அலீ (ரலி)   நூல் : முஸ்லிம் (3657)
''ஒரு மனிதர் தன் தாய் தந்தையர்களை சபிப்பது பெரும்பாவங்களில் உள்ளதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது '' அல்லாஹ்வின் தூதரே ஒரு மனிதர் தன் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?'' என்று கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், ''ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும், தாயையும் ஏசுவார். (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்.)'' என்றார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரி (5973)
பெற்றோருக்கு துன்பம் தருபவன் சுவனம் புகமுடியாது
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மூன்று நபர்களை அல்லாஹ் மறுமை நாளில் (கருணைக் கண்கொண்டு) பார்க்க மாட்டான். 1. தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர். 2. ஆண்களைப் போன்று வேடமிடக்கூடிய பெண் 3. தன்னுடைய மனைவி தவறான நடத்தை கொண்டவளாக இருப்பதை அறிந்தும் ரோஷம் கொள்ளாத கணவன் ஆகியோராவர். இன்னும் மூன்று நபர்கள் சுவர்க்கம் புகமாட்டார்கள் 1.தன்னுடைய பெற்றோருக்கு துன்பம் தருபவர் 2. நிரந்தரமாக மது அருந்துபவன் 3. கொடுத்ததை சொல்லிக் காட்டுபவன்.
அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) நூல் : நஸயீ (2515)
பெற்றோர்கள் இணை வைப்போராக இருந்தாலும் அவர்களையும் இணைத்து வாழவேண்டும்.    
அஸ்மா பின்த் அபீ பக்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : என்னிடம் என்தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணை வைப்போராக இருந்தார்கள்.நான் அல்லாஹ்வின் தூதரிடம் '' என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப்பேணி நல்ல முறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கேட்டேன்.  நபி (ஸல்) அவர்கள் ''ஆம், நீ உன்தாயின் உறவைப்பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். 
நூல் : புகாரி (2620)
பாவமான காரியங்களில் பெற்றோருக்கு கட்டுப்படுவது கூடாது என்றாலும் மற்ற வி‏ஷயங்களில் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டும்.
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
(அல் குர்ஆன் 29 : 8)
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்
.  (அல் குர்ஆன் 31 :, 15 )
ஸஃது (ரலி) அவர்களுடைய தாயார் அவர்கள் (ஸஃதாகிய) அவர் தன்னுடைய மார்க்கமாகிய (இஸ்லாத்தை) மறுக்கின்றவரை அவரிடம் நான் ஒருபோதும் பேசமாட்டேன், சாப்பிடமாட்டேன், எதையும் அருந்தமாட்டேன் என்று சத்தியம் செய்தார்கள். மேலும் அவர் (ஸஃத் (ரலி) அவர்களுக்கு '' அல்லாஹ் பெற்றோர்களுக்கு நல்லுபகாரம் செய்யவேண்டும் என்று கட்டளையிட்டிருப்பதாக நீ கூறினாய். நான் உன்னுடைய தாய் நான் நீ இவ்வாறு (இஸ்லாத்தை விட்டும் வெளியேற வேண்டும்) என்று கட்டளையிடுகிறேன்'' என்று கூறிளாள்.
இவ்வாறு அவள் மூன்று நாட்கள் (பேசாமல், சாப்பிடாமல், பருகாமல்) இருந்தாள். அவளுக்கு கடுமையான பலவீனம் ஏற்பட்டது. அவருடைய (மற்றொரு மகனாகிய) உமாரா என்பவர் அவருக்கு நீர் புகட்டினார். அவள் ஸஃது (ரலி) அவர்களை சபிப்பவளாக ஆகிவிட்டாள்.  அப்போதுதான் அல்லாஹ்  ''தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தி யுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.'' (அல் குர்ஆன் 29 : 8)  என்று வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர் : முஸ்அப் பின் ஸஃது (ரலி) நூல் : முஸ்லிம் (4432)
பெற்றோர்களுக்காக செய்ய வேண்டிய பிரார்த்தனைகள்
"சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள்புரிவாயாக!''
(அல் குர்ஆன் 17 : 28)
எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
(அல் குர்ஆன் 14 : 41)
"என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக''
(,அல் குர்ஆன் 71 : 28)
"என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்''
 (அல் குர்ஆன் 46 : 15)

தொழுகையைத் திருந்தத் தொழுவீர்

தொழுகையைத் திருந்தத் தொழுவீர்
சபீர் அலி. எம்.ஐ.எஸ்.சி
இஸ்லாம் மார்க்கத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டிய விஷயங்களும், தூய எண்ணத்துடன் செயல் ரீதியாக செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளும் உள்ளன.
இவ்வாறு செயல் வடிவில் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் முதன்மையானது தொழுகையாகும்.
தொழுகை என்பது இறைவனுக்காக ஒவ்வொரு இஸ்லாமியனும் ஒரு நாளைக்கு குறித்த நேரத்தில் குறிப்பிட்ட முறையில் ஐவேளை செய்ய வேண்டிய கட்டாயக் கடமையாகும்.
தொழுகையைத் தவறவிடாமல் சரியான முறையில் நிறைவேற்றுபவர்களுக்கு இறைவனிடம் ஏராளமான நன்மைகள் உள்ளன.
“தொழுகையை நிலைநாட்டி, ஸகாத் கொடுத்து, அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பியோர்க்கே மகத்தான கூலியை வழங்குவோம்”.
அல்குர்ஆன்(4:162).
மேலும், தொழுகையைப் பேணாமல் தவறவிட்டவர்களுக்கு தண்டனைகள் உள்ளது என்பதையும் திருக்குர்ஆன் பிரகடனப்படுத்துகிறது.
அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். "நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள்.
அல்குர்ஆன்(74: 40 - 44).
தொழுகையாளிகளுக்கு கூலிகளும், தொழாதவர்களுக்கு தண்டனைகளும் இருப்பதைப் போன்றே தொழுதும் அலட்சியத்தையும், சோம்பலையும் தவிர்க்காதவர்களுக்கு கடும் கண்டனத்தையும் திருக்குர்ஆன் பதிவு செய்கிறது.
“தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடுதான்”.
அல்குர்ஆன் (107: 4, 5).
“நயவஞ்சகர்கள் அல்லாஹ்வை ஏமாற்ற நினைக்கின்றனர். அவனோ அவர்களை ஏமாற்றவுள்ளான். அவர்கள் தொழுகையில் நிற்கும் போது சோம்பேறிகளாகவும், மக்களுக்குக் காட்டுவோராகவும் நிற்கின்றனர். குறைவாகவே அல்லாஹ்வை நினைக்கின்றனர்”.
அல்குர்ஆன் (4: 142).
இன்றைக்கு மக்கள் தங்களின் அலட்சியத்தால் தொழுகையில் செய்யும் தவறுகளைத்தான் இக்கட்டுரையில் பார்க்க இருக்கிறோம்.
1. நிதானமாக வாருங்கள்.
தொழுகைக்குத் தாமதமாக வரும் மக்கள் இமாம் நிலையில் இருக்கும் போது நிதானத்துடன் நடந்து வருகிறார்கள்.
அதே வேளையில் இமாம் ருகூஃவிற்குச் சென்று விட்டால், தொழும் இடமே அதிரும் அளவிற்கு தொழுபவர்களுக்கு இடைஞ்சல் ஏற்படுத்தும் விதமாக நிதானம் இழந்து வேகமாக ஓடி வருவதைப் பார்க்கின்றோம்.
அதிலும் இரு மாடி கட்டிட பள்ளிவாசல்களாக இருந்தால் மேல் கட்டிடத்தில் ருகூஃவில் இணைய ஓடி வருபவர்களின் சலசலப்பு கீழ் கட்டிடத்தில் நின்று தொழக்கூடியவர்களைத் திசைதிருப்பும் விதமாக அமைகிறது.
இந்த இடத்தில் இவர்கள் தொழுகை தவறிவிடும் என்கின்ற ஆர்வத்தில் ஓடி வருகின்றார்கள் என்று சொல்வதை விட தங்களையும் அறியாமல் பின்வரும் நபிமொழியை அலட்சியம் செய்கின்றனர் என்பதே சரியானது.
(ஒரு முறை) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தோம். அப்போது சிலர் (தொழுகையில் வந்து சேர அவசரமாக வந்ததால் உண்டான சந்தடிச் சப்தத்தைத் செவியுற்றார்கள். தொழுது முடித்ததும், "உங்களுக்கு என்ன ஆயிற்று (ஏன் சந்தடி எழுந்தது)?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், தொழுகையில் வந்து சேர்வதற்காக நாங்கள் விரைந்து வந்தோம் (அதனால் சலசலப்பு ஏற்பட்டது)'' என்று பதிலளித்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்யாதீர்கள் தொழுகைக்கு வரும்போது நிதானத்தைக் கடைப் பிடியுங்கள். (இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பாளர் - அபூ கதாதா(ரலி)
நூல் - புகாரி 635.
இவ்வாறு ருகூஃவில் இணைவதற்காக வேகம் எடுக்கும் சிலர், முதல் வரிசையைப் பூர்த்தி செய்யாமலே அடுத்த ஒரு வரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இதுவும் தவறான காரியமாகும்.
2. கிடைத்ததில் இணையுங்கள்.
ருகூஃவில் இணைய வேண்டும் என்று வேகம் எடுக்கும் மக்கள் இணைவதற்கு முன்பே ருகூஃவிலிருந்து இமாம் எழுந்துவிட்டால் அவர்களின் வேகம் எங்கு செல்கின்றது என்று தெரியவில்லை.
ஆம், இமாம் ஸஜ்தா செய்து எழுந்து, மற்றொரு ஸஜ்தா செய்து எழுந்து நிலைக்கு வரும் வரை ஸஃப்பில் தொழுகையில் இணையாமல் நின்று கொண்டிருக்கின்றனர்.
அதிலும் இரண்டாம் ரக்அத்தாக இருந்து இமாம் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து விட்டால் அத்தஹிய்யாத் முடித்து தக்பீர் கட்டுகின்றவரை தொழுகையில் இணைய மறுக்கின்றனர்.
இது தவறாகும். நாம் தொழுகையின் ஸஃப்பிற்கு வந்தவுடன் எது நமக்கு கிடைக்கிறதோ அதில் இணைந்து விட வேண்டும்.
அது ஒரு ரக்அத்தாகக் கணக்கில் கொள்ளப்படாவிட்டாலும் கிடைத்ததில் இணைந்து விட வேண்டும்.
இதற்கு மேலே நாம் சொன்ன ஹதீஸிலேயே ஆதாரம் இருக்கிறது.
“(இமாமுடன்) கிடைத்ததைத் தொழுங்கள். உங்களுக்குத் தவறிப்போன (ரக்அத்)தை (தொழுகை முடிந்ததும் எழுந்து) பூர்த்தி செய்யுங்கள்'' என்று கூறினார்கள்.
3. இரு கைகளையும் சரியாக உயர்த்துங்கள்
தொழுகையில் குறிப்பிட்ட இடங்களில் கைகைளை தோல் புஜங்களுக்கு நேராகவோ, அல்லது காதுகளின் நுணி பகுதிக்கு நேராகவோ உயர்த்த வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் துவக்கும்போது தமது தோள்களுக்கு நேராகத் கைகளை உயர்த்துவார்கள். ருகூஉவிற்காக தக்பீர் கூறும்போதும், ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போதும் அவ்வாறே (தோள்களுக்கு நேராக) இரு கைகளையும் மீண்டும் உயர்த்துவார்கள். மேலும் (ருகூவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ், ரப்பனா வல(க்)கல் ஹம்து' என்று கூறுவார்கள். சஜ்தாவில் (குனியும்போதும் சஜ்தாவிலிருந்து நிமிரும்போதும்) இவ்வாறு செய்யமாட்டார்கள் (கைகளை உயர்த்த மாட்டார்கள்).
அறிவிப்பாளர் - அப்துல்லாஹ் பின் உமர் (ரலி).
நூல் - புகாரி 735.
“நபி(ஸல்) அவர்கள் தக்பீர் கூறி (தொழுகையை ஆரம்பித்தாலும்), ருகூஃவு செய்தாலும் தனது இரு கைகளையும் தனது இரு காதின் (கீழ் பகுதி)க்கு நேராக உயர்த்துவார்கள். மேலும், ருகூஃவிலிருந்து தனது தலையை உயர்த்தும்பொழுது "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி அவ்வாறே இரு கைகளையும் உயர்த்துவார்கள்”.
அறிவிப்பாளர் - மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி).
நூல் - முஸ்லிம் 589.
தொழுகையில் கைகளை உயர்த்தும்பொழுது ஒன்று தோல் புஜங்களுக்கு நேராக அல்லது காதுகளின் கீழ் பகுதிக்கு நேராக உயர்த்த வேண்டும்.
ஆனால், இன்று அதிகமானவர்கள் அலட்சியமாக நெஞ்சோடு தங்கள் கைகளை உயர்த்தி இறக்கி விடுகிறார்கள்.
கைகளை உயர்த்துவதில் கூட கஞ்சத்தனத்தை மேற்கொள்ளக்கூடிய காட்சியைப் பார்க்கின்றோம்.
அதிலும் சிலர் கைகளை உயர்த்தும்பொழுது கைகளை நீட்டாமல் மூடிக் கொள்கின்றனர்.
“நபி(ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தனது இரு கைகளையும் (மூடாமல்) நீட்டுவார்கள்”.
அறிவிப்பாளர் - அபூ ஹுரைரா (ரலி).
நூல் - திர்மிதீ 223.
இதுவும் நமது தொழுகையில் நாம் சரிசெய்ய வேண்டிய ஒரு விஷயமாகும்.
4. நன்றாகத் திரும்புங்கள்
தொழுகையை இடது புறமும், வலது புறமும் ஸலாம் சொல்லி நிறைவு செய்ய வேண்டும்.
அவ்வாறு ஸலாம் கொடுக்கும்போது நமது கழுத்தை நன்றாகத் திருப்ப வேண்டும்.
நபி(ஸல்) அவர்களின் கன்னத்தின் வெண்மையை நான் பார்க்கும் அளவுக்கு அவரகள் தமது இடபுறமும் வலதுபுறமும் (திரும்பி) ஸலாம் கொடுத்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பாளர் - ஸஅது (ரலி).
நூல் - 1021.
ஆனால் இன்றைக்கு சிலர் ஸலாம் கொடுக்கும்போது தங்களது கழுத்தை நன்றாகத் திருப்புவதற்குக் கூட யோசிக்கின்றார்கள்.
5. ஸஜ்தாவைச் சரி செய்யுங்கள்
ஸஜ்தா செய்வதற்கென்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்ட முறையை கற்றுத் தந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நெற்றி, இரு (உள்ளங்)கைகள், இரு முழங்கால்கள், இரு பாதங்களின் நுனிகள் ஆகிய ஏழு உறுப்புக்கள் படுமாறு சஜ்தாச் செய்யும்படி நான் கட்டளையிடப்பட்டுள்ளேன்.- (நெற்றியைக் குறிப்பிடும்போது) தமது மூக்கின் மீது தமது கையால் (மூக்கு உட்பட என்பதுபோல்) சைகை செய்தார்கள்- தொடர்ந்து ஆடையோ முடியோ (தரையில் படாதவாறு) பிடிக்கக் கூடாதெனவும் கட்டளையிடப்பட்டுள்ளேன் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பாளர் - இப்னு அப்பாஸ் (ரலி).
நூல் - புகாரி 812.
இவ்வாறு ஸஜ்தா செய்கின்றபொழுது முழங்கைகளை தரையில் சிலர் விரித்து வைக்கின்றனர். இதுவும் தவறாகும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
“முறைப்படி சிரவணக்கம் (சஜ்தா) செய்யுங்கள். நாயைப் போன்று கைகளைப் படுக்க வைக்கலாகாது”.
அறிவிப்பவர் - அனஸ்(ரலி)
நூல் - புகாரி 532(சுருக்கம்)
மேலே நாம் சுட்டிக்காட்டிய தவறுகளும், இது அல்லாமல் உளு செய்யும் போது தலைமுடி களையாமல் மஸஹ் செய்தல், குதிகால்களைக் கழுவுவதில் அலட்சியம் செய்தல், தொழுகை வரிசையில் நெருங்கி நிற்பதில் அலட்சியம், இவை போன்ற இன்னும் ஏராளமான தவறுகளும் பல தடவைகள் மக்களுக்கு சுட்டிக்காட்டபட்டிருந்தாலும், அதில் போதிய கவனம் மக்களுக்கு இன்னும் வரவில்லை என்பதினாலே மீண்டும் மீண்டும் இவைகளை எடுத்துச் சொல்கிறோம்.
இந்தத் தவறுகள் அனைத்துமே விதிவிலக்கல்லாமல் எல்லா ஊர்களிலும் சிலரால் செய்யப்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றன.
இந்த உலகத்தில் நமக்குக் கிடைக்கும் பலன் தவறிவிடாமல் இருப்பதற்காக அதிக கவனம் செலுத்துகின்ற நாம், நாளை மறுமையில் நமக்கு அதிக நன்மையை வழங்கக் கூடிய இந்தத் தொழுகையிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும்.

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?

ஹதீஸ்களை மறுப்பவர்கள் யார்?
ஏகத்துவக் கொள்கை தமிழகம் உட்பட பல நாடுகளில் உள்ளது. இதை உள்ளபடி தெளிவாகச் சொன்ன ஜமாஅத், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்று சொன்னால் அது மிகையாகாது.
இந்த ஜமாஅத்தின் தன்னலமற்ற மார்க்கச் சேவையினால் ஏராளமான மக்கள் இந்தக் கொள்கையின் பக்கம் ஈர்க்கப்படுகிறார்கள். இதனால் அசத்தியக் கொள்கையில் இருக்கும் அமைப்புகள் ஆட்டம் காண, இந்த நிலையை தொடரவிடக் கூடாது என்று ஏராளமான அவதூறுகளை அள்ளி நம் மீது வீசுகின்றன.
அவற்றில் ஒன்றுதான் ஹதீஸ்களை மறுக்கும் கூட்டம் என்று நம்மைக் குறிப்பிடுவது.
பரலேவிகள், சலபுகள், ஜாக் போன்ற இயக்கங்கள் இத்தகைய அவதூறுகளைச் சொல்லும் சில அமைப்புகளாகும்.
தமிழகத்தில் இணைவைப்புக் கொள்கை நிறைந்து, மார்க்கம் பற்றி விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இஸ்லாத்தின் அடிப்படைகளான திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து இன்று எண்ணற்ற மக்கள் திருக்குர்ஆன், நபிமொழிகளின் வழிகாட்டுதலின் அடிப்படையில் வாழும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்றும் அந்தப் பணி தொய்வின்றி நடந்து வருகின்றது.
மறந்திருந்த, மறைக்கப்பட்ட ஏராளமான நபிவழியை உயிர்ப்பித்திருக்கின்றோம்.
ஆனால் நபிமொழிகளைப் பகிரங்கமாக புறக்கணிக்கும் கூட்டமும், நபிமொழிகளைக் கேலி செய்யும் கூட்டமும், நபிமொழிகளை அலட்சியப்படுத்தும் கூட்டமும் நம் மீது அவதூறு சொல்வது ஆச்சரியமாக உள்ளது.
ஹதீஸ்களை நாம் மறுத்தோமா?
நாம்  நபிமொழிகளை மறுக்கிறோம் என்று மக்களிடம் பேசிவரும் கும்பலைப் பார்த்துக் கேட்கிறோம். நாங்கள் ஹதீஸ்கள் என்று நம்பிய செய்திகளை மறுக்கிறோமா? அல்லது அது நபிமொழி அல்ல என்று கூறி மறுக்கிறோமா?
ஒருவன் நபிமொழி என்று தெரிந்து கொண்டு, அதை நம்பிக் கொண்டும் அதன்படி செயல்பட மாட்டேன், ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்று கூறினால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று கூறலாம்.
ஆனால் ஏராளமான ஆதாரப்பூர்மான நபிமொழிகளை நடைமுறைப் படுத்திவிட்டு, நபிமொழி என்று சொல்லப்படும் சில செய்திகள் நபிமொழியல்ல, இது நபிகளார் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்று சொல்லி அதை மறுத்தால் அவனை நபிமொழி மறுப்பாளன் என்று எப்படிச் சொல்ல முடியும்?
சில நபிமொழிகள் என்ற பட்டியலில் உள்ள செய்தி நபிகளார் சொன்ன செய்தி அல்ல. அதற்கு இன்னென்ன காரணங்கள் என்று விளக்குகிறோம்.
நபிமொழி என்று எதைச் சொல்ல வேண்டும்?
நபிகளார் ஒரு செய்தியைச் சொன்னார்கள் என்று கூறினால் அதற்கு முக்கியமான இரண்டு நிபந்தனைகள் இருக்க வேண்டும்.
ஒன்று அறிவிப்பாளர் தொடர்பானவை.
இரண்டு சொல்லப்படும் செய்தி தொடர்பானவை.
அதன் அறிவிப்பாளர்களும் அதன் அறிவிப்பாளர் வரிசையும், நம்பகமானவையாக இருக்க வேண்டும்.
அறிவிக்கப்படும் செய்தி குறிப்பாக இஸ்லாத்தின் அடிப்படை விதிகளுக்கும், திருக்குர்ஆனுக்கும் முரணாக இருக்கக்கூடாது. மேலும் எவ்விதத்திலும் அறிவுக்கு ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் அந்த செய்தி அமைந்திருக்கக் கூடாது.
இந்த இரண்டு முக்கியமான காரணங்களில் ஒன்று சரியில்லையானால் அது நபிமொழிப் பட்டியலில் இடம்பெறாது.
இந்த நிபந்தனைகளை விதித்தது யார்?
நபிமொழிகள் அறிவிப்பாளர்கள் நம்பகமானவராக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது என்ற விதியை நாம்தான் முதலில் கொண்டு வந்தோம் என்று சிலர் கூறுவது தவறாகும். இது ஹதீஸ் கலை நூல்களில் தெளிவாகவே இடம்பெற்றுள்ளது.
திருக்குர்ஆனுக்கு முரணாக இருக்கக் கூடாது
இந்த விதி நபித்தோழர்கள் காலத்திலேயே அமல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் இந்த விதியை வைத்தே சில நபிமொழிகளை நிராகரித்துள்ளார்கள்.
அப்துல்லாஹ் பின் உபைதில்லாஹ் அவர்கள் கூறியதாவது:
மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களுடைய மகள் இறந்த போது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கு அருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ரு (ரலி) அவர்களிடம் நீ (சப்தமிட்டு) அழுபவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' எனக் கூறியுள்ளார்கள் என்றார்.
 உடனே இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்கள் இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு கருவேல மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாதெனப் பார்த்து வா!' என உமர் (ரலி) என்னை அனுப்பினார்கள்.
நாம் அங்கு சென்று பார்த்த போது அங்கே ஸுஹைப் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அதை உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவரை என்னிடம் அழைத்து வா' என உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். நான் ஸுஹைப் அவர்களிடம் சென்று, இறை நம்பிக்கையாளர்களின் தலைவர் (அமீருல் மூமினின்) அவர்களைச் சந்திக்கப் புறப்படுங்கள்' எனக் கூறினேன்.
பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்கள் குற்றுயிராய்க் கிடந்தபோது அவர்களிடம் சகோதரரே! நண்பரே! எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) அவர்கள் (வீட்டினுள்) நுழைந்தார்கள். அப்போது உமர் (ரலி) ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமிட்டு) அழுவதன் காரணமாக இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்' என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களல்லவா?'  என்றார்கள். உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறை நம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான்' எனக் கூறவில்லை.
மாறாக குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் இறை மறுப்பாளருக்கு (காஃபிர்) வேதனை மிகுதியாக்கப்படும்' என்றே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று கூறிவிட்டு ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது' எனும் (6:164ஆவது) இறை வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே என்றும் கூறினார்கள்.
இதைக் கூறி முடித்த பொழுது சிரிக்கச் செய்பவனும் அழ வைப்பவனும் அவனே' (53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அல்லாஹ்வின் மீதாணையாக! இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுடைய இச்சொல்லைத் செவியுற்ற அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை' என்று இப்னு அபீமுலைக்கா  அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 1286, 1287 & 1288)
குடும்பத்தினர் அழுவதன் காரணமாக இறைநம்பிக்கையாளரை (மூமின்) அல்லாஹ் வேதனை செய்வான் என்று நபிகளார் சொன்னதாக உமர் (ரலி) சொன்ன செய்தியை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மறுக்கும் போது, இது நபிகளாரின் சொல் அல்ல என்பதற்கு ஒருவன் மற்றவனின் சுமையைச் சுமக்க மாட்டான் என்ற குர்ஆன் வசனமே போதுமானது என்று கூறியுள்ளார்கள்.
உமர் (ரலி) அவர்கள் கூறியது நபிகளாரின் கூற்று அல்ல என்பதற்கு திருக்குர்ஆனின் கருத்துக்கு அது மாற்றமாக உள்ளது என்பதையே அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் ஆதாரமாகக் காட்டியுள்ளார்கள்.
இதே விதியை ஹதீஸ் கலையின் வல்லுநர்களின் ஒருவரான ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அந்நுக்தா என்ற நூலில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எப்படி இருக்கும் என்பதை விவரிக்கும்போது பின் வருமாறு தெளிவுபடுத்துகிறார்கள்.
النكت على كتاب ابن الصلاح ـ محقق - (2 / 846)
ومنها: أن يكون مناقضا لنص الكتاب
இறைவேதத்திற்கு முரணாக அமைந்திருக்கும்.
நூல் அந்நுக்தா, பாகம் 2, பக்கம் 846
இமாம் நவவீ அவர்களின் அத்தக்ரீப் வத்தைஸீர் லி மஃரிபத்தில் பஷீருன் நதீர் ஃபீ உசூலில் ஹதீஸ் (சுருக்கமாக தக்ரீப் என்று கூறுவர்) என்ற ஹதீஸ் கலை நூலுக்கு விரிவுரை நூலான இமாம் சுயூத்தி அவர்களின் தத்ரீபுர்ராவீ என்ற நூலிலும் இக்கருத்து சொல்லப்பட்டுள்ளது.
تدريب الراوي - (1 / 276)
أو يكون منافيا لدلالة الكتاب القطعية
உறுதியான வேதத்தின் ஆதாரங்களுக்கு எதிராக அமைந்திருக்கும்.
நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் 276
(இமாம் நவவீ அவர்கள் இறப்பு ஹிஜ்ரீ 676, சுயூத்தி பிறப்பு 849)
இமாம் பைஹகீ அவர்களின் கருத்து
الأسماء والصفات للبيهقي ـ موافق للمطبوع - (2 / 250)
812- أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ ، حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ ، حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ مُحَمَّدِ الدُّورِيُّ ، حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ ، قَالَ : قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ أُمَيَّةَ ، عَنْ أَيُّوبَ بْنِ خَالِدٍ ، عَنْ عَبْدِ اللهِ بْنِ رَافِعٍ ، مَوْلَى أُمِّ سَلَمَةَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : أَخَذَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِي ، فَقَالَ : خَلَقَ اللَّهُ التُّرْبَةَ يَوْمَ السَّبْتِ ، وَخَلَقَ فِيهَا الْجِبَالَ يَوْمَ الأَحَدِ ، وَخَلَقَ الشَّجَرَ يَوْمَ الإِثْنَيْنِ ، وَخَلَقَ الْمَكْرُوهَ يَوْمَ الثُّلاثَاءِ ، وَخَلَقَ النُّورَ يَوْمَ الأَرْبِعَاءِ ، وَبَثَّ فِيهَا مِنَ الدَّوَابِّ يَوْمَ الْخَمِيسِ ، وَخَلَقَ آدَمَ بَعْدَ الْعَصْرِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ آخِرَ الْخَلْقِ ، فِي آخِرِ سَاعَةٍ مِنْ سَاعَاتِ الْجُمُعَةِ فِيمَا بَيْنَ الْعَصْرِ إِلَى اللَّيْلِ
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனது கையைப் பிடித்துக் கொண்டு, " அல்லாஹ் சனிக்கிழமையன்று மண்ணை (பூமியை)ப் படைத்தான். அதில் மலைகளை ஞாயிற்றுக்கிழமையன்று படைத்தான். மரங்களை திங்கட்கிழமை படைத்தான். துன்பத்தை செவ்வாய் கிழமையன்றும் ஒளியை புதன்கிழமையன்றும் படைத்தான். வியாழக்கிழமையன்று உயிரினங்களைப் படைத்து பூமியில் பரவச் செய்தான். (ஆதி மனிதர்) ஆதம் (அலை) அவர்களை வெள்ளிக்கிழமை அஸ்ருக்குப்பின் அந்த நாளின் இறுதி நேரத்தில் அஸ்ருக்கும் இரவுக் குமிடையேயுள்ள நேரத்தில் இறுதியாகப் படைத்தான்'' என்று கூறினார்கள்.
(நூல் அஸ்மா வஸ்ஸிஃபாத், பாகம்: 2, பக்கம்: 250)
இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு இதன் விமர்சனத்தைப் பதிவு செய்கிறார்கள்.
هَذَا حَدِيثٌ قَدْأَخْرَجَهُ مُسْلِمٌ فِي كِتَابِهِ ، عَنْ سُرَيْجِ بْنِ يُونُسَ ، وَغَيْرِهِ ، عَنْ حَجَّاجِ بْنِ مُحَمَّدٍ. وَزَعَمَ بَعْضُ أَهْلِ الْعِلْمِ بِالْحَدِيثِ أَنَّهُ غَيْرُ مَحْفُوظٍ لِمُخَالَفَتِهِ مَا عَلَيْهِ أَهْلُ التَّفْسِيرِ وَأَهْلُ التَّوَارِيخِ.
இந்தச் செய்தியை இமாம் முஸ்லிம் அவர்கள் தனது (ஸஹீஹ் முஸ்லிம்) நூலில் (5379) பதிவு செய்துள்ளார்கள். சில கல்வியாளர்கள் இந்தச் செய்தி சரியானதல்ல என்று குறிப்பிடுகிறார்கள். ஏனெனில் இது திருக்குர்ஆன் விளக்கவுரையாளர்கள், வரலாற்று ஆசிரியர்களுடைய கருத்துக்கு முரணாக அமைந்திருக்கிறது.
முஸ்லிம் உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ள செய்தி ஏற்க முடியாது என்பதற்கு அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று குறிப்பிடவில்லை. மாறாக விரிவுரையாளர்களின் கருத்துக்கும் வரலாற்று ஆய்வாளரின் கருத்துக்கும் முரணாக உள்ளது என்கிறார்கள். விரிவுரையாளர்களின் கருத்துக்கு முரணாக இருந்தால் ஒரு ஹதீஸை நிராகரிக்கலாம் என்று பைஹகி கூறுவது போல் நாம் கூறவில்லை. குர்ஆனுக்கு மாற்றமாக இருந்தால் தான் நிராகரிக்கப்படும் எனக் கூறுகிறோம்.
(இமாம் பைஹகீ அவர்கள் ஹிஜ்ரி 384 ல் பிறந்தவர்கள்)
முஸ்லிமில் உள்ள ஹதீஸ் தொடர்பாக இதே கருத்தை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டு பல ஹதீஸ்கலை அறிஞர்கள் இதே கருத்தில் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
النكت على مقدمة ابن الصلاح - (2 / 269)
وكذا ضعفه البيهقي وغيره من الحفاظ وقالوا هو خلاف ظاهر القرآن من أن الله خلق السموات والأرض في ستة أيام والحديث أخرجه مسلم في صحيحه من جهة ابن جريج عن إسماعيل به
இதைப் போன்று பைஹகீ மற்றும் அவரல்லாத ஹதீஸ் கலை நிபுணர்களும் இதை (ஏற்றுக் கொள்ள முடியாத) பலவீனமான செய்தி என்று குறிப்பிடுகிறார்கள். (அதற்குக் காரணமாக) அல்லாஹ் வானங்கள், பூமியை ஆறுநாட்களின் படைத்தான் என்ற திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக இருப்பதைக் குறிப்பிடுகிறார்கள்.
நூல் : அந்நுக்தா, பாகம்: 2, பக்கம்: 269
இதைப் போன்று புகாரியின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையுள்ள செய்தியை திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று இஸ்மாயீலீ அவர்கள் மறுத்துள்ளதாக ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நபி இப்ராஹிம் (அலை) அவர்கள் (தம் தந்தை) ஆஸர் அவர்களை மறுமை நாளில் சந்திப்பார்கள். ஆஸருடைய முகத்தில் (புகையின்) கருமையும், புழுதியும் படிந்திருக்கும். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் எனக்கு மாறு செய்ய வேண்டாம் என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று அவர்களிடம் கேட்பார்கள். அதற்கு அவர்களின் தந்தை இன்று உனக்கு நான் மாறு செய்ய மாட்டேன் என்று கூறுவார். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்கள் இறைவா மக்களுக்கு உயிர் கொடுத்து எழுப்பப்படும் மறுமை நாளில் என்னை இழிவுபடுத்த மாட்டாய் என்று எனக்கு நீ வாக்களித்திருந்தாய். (உன் கருணையிலிருந்து) வெகு தொலைவில் இருக்கும் என் தந்தையை விட வேறெந்த இழிவு (எனக்கு) அதிகம் இழிவு தரக்கூடியது? என்று கேட்பார்கள்.
அப்போது உயர்வான அல்லாஹ் இப்ராஹீம் அவர்களிடம் நான் சொர்க்கத்தை இறை மறுப்பாளர்களுக்குத் தடை செய்து விட்டேன் என்று பதிலளிப்பான். பிறகு இப்ராஹீமே உங்கள் கால்களுக்குக் கீழே என்ன இருக்கிறது என்று பாருங்கள் என்று கூறப்படும். அவர்கள் கீழே பார்ப்பார்கள். அப்போது அங்கே இரத்தத்தில் தோய்ந்த முடிகள் நிறைந்த கழுதைப்புலி ஒன்று கிடக்கும். பின்னர் அதன் கால்களைப் பிடித்துத் தூக்கப்பட்டு நரகத்தில் அது போடப்படும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : புகாரி (3350)
புகாரியில் உள்ள இந்தச் செய்திக்கு விரிவுரை வழங்கும்போது பின்வருமாறு இஸ்மாயீலீ அவர்கள் கருத்தை எடுத்துரைக்கிறார்கள்.
. وَقَدْ اِسْتَشْكَلَ الْإِسْمَاعِيلِيّ هَذَا الْحَدِيث مِنْ أَصْله وَطَعَنَ فِي صِحَّته فَقَالَ بَعْدَ أَنْ أَخْرَجَهُ : هَذَا خَبَر فِي صِحَّته نَظَر مِنْ جِهَة أَنَّ إِبْرَاهِيم عَلِمَ أَنَّ اللَّه لَا يُخْلِف الْمِيعَاد ; فَكَيْف يَجْعَل مَا صَارَ لِأَبِيهِ خِزْيًا مَعَ عِلْمه بِذَلِكَ ؟ وَقَالَ غَيْره : هَذَا الْحَدِيث مُخَالِف لِظَاهِرِ قَوْله تَعَالَى : ( وَمَا كَانَ اِسْتِغْفَار إِبْرَاهِيم لِأَبِيهِ إِلَّا عَنْ مَوْعِدَة وَعَدَهَا إِيَّاهُ , فَلَمَّا تَبَيَّنَ لَهُ أَنَّهُ عَدُوّ لِلَّهِ تَبَرَّأَ مِنْهُ ) اِنْتَهَى
இது அடிப்படையில் சிக்கல் உள்ளதாகும் என்று இஸ்மாயீலீ அவர்கள் கூறிவிட்டு இதன் நம்பகத்தன்மையில் குறையுள்ளது என்று சொல்லியுள்ளார்கள்.
பின்னர் அவர் இந்தச் செய்தியை பதிவு செய்து விட்டு (பின்வருமாறு) கூறுகிறார். அல்லாஹ் வாக்கு மீறமாட்டான் என்று இப்ராஹீம் (அலை) அவர்கள் உறுதியாக அறிந்திருந்தார்கள். இதை அவர்கள் விளங்கியிருக்கும்போது தனது தந்தைக்கு ஏற்பட்டதைத் தனக்கு ஏற்பட்ட இழிவாக அவர்கள் எப்படிக் கருதியிருப்பார்கள்? என்று இஸ்மாயீலீ கேட்கிறார்கள். இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர். சகிப்புத் தன்மை உள்ளவர் என்ற இந்த இறைவனுடைய வெளிப்படையான கூற்றிற்கு இந்த ஹதீஸ் முரண்படுகிறது என்று இஸ்மாயீலீ அல்லாத மற்றவர்கள் விமர்சித்துள்ளார்கள்.
நூல் : ஃபத்ஹுல்பாரீ பாகம் : 8 பக்கம் : 500
இப்ராஹீம் நபியவர்களின் தந்தை தொடர்பான இந்தச் செய்தி சரியானது அல்ல என்று குறிப்பிடும் இஸ்மாயீலீ மற்றும் பல அறிஞர்கள் இது அறிவிப்பாளர் தொடரில் பலவீனமானவர் இருக்கிறார் என்று கூறாமல் திருக்குர்ஆனுக்கு முரணாக உள்ளது என்று கூறியே இந்தச் செய்தியை மறுத்துள்ளார்கள்.
இதைப் போன்று இமாம் மாலிக் அவர்களும் திருக்குர்ஆனுக்கு முரண் என்றால் அதை ஏற்கக் கூடாது என்ற கருத்தில் இருந்துள்ளார்கள்.
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த ஒரு பெண்மனி நபி (ஸல்) அவர்களிடம் கடைசி ஹஜ்ஜின் போது வந்து அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ்வுடைய ஹஜ் என்னும் கடமை என் தந்தைக்கு விதியாகி விட்டது. அவர் முதிர்ந்த வயதுடையவராகவும் வாகனத்தில் அமர முடியாதவராகவும் இருக்கிறார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி (1854)
இந்தச் செய்தியின் விரிவுரையில் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் பின்வருமாறு மாலிக் இமாம் அவர்களின் கருத்தைப் பதிவு செய்துள்ளார்கள்.
وقال القرطبي رأى مالك أن ظاهر حديث الخثعمية مخالف لظاهر القرآن فرجح ظاهر القرآن ولا شك في ترجيحه من جهة تواتره
கஸ்அம் கோத்திரத்தைச் சார்ந்த பெண்மணியின் ஹதீஸின் வெளிப்படையான கருத்து. திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கு முரணாக உள்ளது என்று மாலிக் இமாம் அவர்கள் கூறி, திருக்குர்ஆனின் வெளிப்படையான கருத்துக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கினார்கள் என்று குர்துபீ அவர்கள் கூறினார்கள்.
நூல் : பத்ஹுல்பாரீ பாகம் : 4 பக்கம் : 70
அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்றுவர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. (அல்குர்ஆன் 3 :97)  என்ற வசனம் சக்தியில்லாதவர்களுக்குக் கடமையில்லை என்பதை தெளிவாக உணர்த்துகிறது. ஆனால் புகாரியின் ஹதீஸ் செய்ய வேண்டுமென கூறுகிறது.
இது திருக்குர்ஆனுக்கு முரண்படுவதால் அறிவிப்பாளர் வரிசை சரியாக இருந்தாலும், இந்தச் செய்தி புகாரியில் இருந்தாலும் திருக்குர்ஆன் கருத்துக்கே முன்னுரிமை கொடுத்துள்ளார்கள் இமாம் மாலிக் அவர்கள்.
(இமாம் மாலிக் அவர்கள் ஹிஜ்ரி 93-ல் பிறந்து 179 ல் இறந்தார்கள்)
அன்னை ஆயிஷா (ரலி), இமாம் மாலிக், இஸ்மாயீலீ, பைஹகீ போன்ற அறிஞர்களையும் ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று சொல்வார்களா?
நம்பகமான அறிவிப்பாளர்கள் தவறிழைப்பார்களா?
இறைவனைத் தவிர மற்ற எல்லா மனிதர்களும் தவறிழைப்பவர்கள் என்று நம்புவதுதான் இறைநம்பிக்கை. அந்த அடிப்படையில் நபித்தோழர்கள் உட்பட அனைவரும் தவறுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல. இதே கருத்தை அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மிகத் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
உயிருள்ளவர்கள் அழுவதால் மய்யித்திற்கு வேதனை செய்யப்படுகிறது என்ற உமர் (ரலி) அவர்களின் கருத்தை மறுத்த பின்னர் பின்வருமாறு கூறுகிறார்கள்.
صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (3 / 43)
لَمَّا بَلَغَ عَائِشَةَ قَوْلُ عُمَرَ وَابْنِ عُمَرَ قَالَتْ إِنَّكُمْ لَتُحَدِّثُونِّى عَنْ غَيْرِ كَاذِبَيْنِ وَلاَ مُكَذَّبَيْنِ وَلَكِنَّ السَّمْعَ يُخْطِئُ.
உமர் (ரலி) மற்றும் இப்னு உமர் (ரலி) ஆகியோரின் கூற்று ஆயிஷா (ரலி) அவர்களுக்கு எட்டியபோது "நீங்கள் பொய்யர்களோ பொய்ப்பிக்கப்பட்டவர்களோ அல்லாத இருவர் சொன்ன ஹதீஸை என்னிடம் கூறுகின்றீர்கள். ஆயினும், செவி (சில நேரங்களில்) தவறாக விளங்கி விடுகிறது'' என்று கூறினார்கள்.
(நூல்: முஸ்லிம் 1693)
நம்பகத் தன்மையில் முதலிடம் இருக்கும் நபித்தோழர்களுக்கே தவறு வரும் என்றால் புகாரி இமாமுக்கோ அல்லது அவர்கள் நூலில் உள்ள அறிவிப்பாளர்களுக்கோ தவறு வராதா?
நம்பகமான அறிவிப்பாளர்களிடமும் தவறு வர வாய்ப்புள்ளது என்பதை மிகத் தெளிவாக ஹதீஸ்கலை நூல்களில் ஒன்றான தத்ரீபுர் ராவீ என்ற நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
تدريب الراوي - (1 / 75)
( وإذا قيل ) هذا حديث ( صحيح فهذا معناه ) أي ما اتصل سنده مع الأوصاف المذكورة فقبلناه عملا بظاهر الاسناد ( لا أنه مقطوع به ) في نفس الأمر لجواز الخطأ والنسيان على الثقة
ஒரு செய்தியை இது ஆதாரப்பூர்வமானது என்று சொல்லப்பட்டால் அதன் பொருள், அறிவிப்பாளர் வரிசை இணைந்து நாம் கூறிய நிபந்தனைகள் அதில் உள்ளன என்பதாகும். எனவே வெளிப்படையான அறிவிப்பாளர் வரிசையைக் கவனத்தில் கொண்டு நம் ஏற்றுக் கொள்வோம். ஆனால் அது முழுக்க முழுக்க சரியான செய்தி என்பது பொருள் அல்ல. ஏனெனில் நம்பகமானவருக்கும் தவறும் மறதியும் ஏற்பட வாய்ப்புள்ளது என்பதால்.
(நூல்: தத்ரீபுர் ராவீ, பாகம்: 1, பக்கம்: 75)
நம்பகமான அறிவிப்பாளர் இடம்பெற்ற செய்தியும் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம் என்று தெளிவாக இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.
الموضوعات لابن الجوزي - (1 / 106)
واعلم أنه قد يجئ في كتابنا هذا من الاحاديث ما لا يشك في وضعه، غير أنه لا يتعين لنا الواضع من الرواة، وقد يتفق رجال الحديث كلهم ثقاة والحديث موضوع أو مقلوب أو مدلس،
அறிந்து கொள்:  இட்டுக்கட்டப்பட்டது என்பதில் சந்தேகம் இல்லாத செய்திகள் இந்தப் புத்தகத்தில் இடம்பெறும். ஆனால் அறிவிப்பாளரில் இட்டுக்கட்டியவர் யார் என்று குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனெனில் சிலவேளை எதார்த்தமாக அனைத்து அறிவிப்பாளர்களும் நம்பகமானவராக அமைந்து விடுவர். ஆனால் அந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதாக அல்லது புரட்டப்பட்டதாக அல்லது இருட்டடிப்பு செய்யப்பட்டதாக இருக்கும்.
நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106
அறிவிப்பாளர் நம்பகமானவர்களாக இருந்தாலும் பல செய்திகள் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாக இருக்கலாம். யார் இட்டுக்கட்டியவர் என்று கண்டுபிடிக்க முடியாது என்று இந்தத் துறையில் நிபுணரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் விளக்கம் மிகத் தெளிவானது.
அறிவு ஏற்கவில்லை என்றால் நிராகரிக்க வேண்டுமா?
நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகள் இறைவன் வழியாக வருபவைதான். அந்தச் செய்தி முற்றிலும் உண்மையானதாகவே இருக்கும். பொய்யான செய்தி வராது.
ஒரு செய்தி நபிகளார் பெயரால் இட்டுக்கட்டி அறிவுக்குப் பொருத்தமில்லாமல் அமைந்திருந்தால் அதைப் படிக்கும்போது நபிகளார் பொய் சொல்லி விட்டார்கள் என்ற மிகப்பெரிய அவதூறு சொன்ன நிலைக்கு ஆளாக வேண்டி வரும். இதனால்தான் ஹதீஸ்கலை வல்லுநர்கள் அறிவுக்குப் பொருந்தாத செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை என்று அடையாளம் காட்டியுள்ளார்கள்.
நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை இனம் காட்டியவர்களில் முதன்மையானவரான இப்னுல் ஜவ்ஸி அவர்கள் கூறுவதைப் பாருங்கள்.
الموضوعات لابن الجوزي - (1 / 106)
فكل حديث رأيته يخالف المعقول، أو يناقض الاصول، فاعلم أنه موضوع فلا تتكلف اعتباره.
நீர் பார்க்கும் ஒவ்வொரு ஹதீஸும் அறிவுக்கு முரணாக அமைந்திருந்தால் அல்லது (இஸ்லாத்தின்) அடிப்படைகளுக்கு முரணாக அமைந்திருந்தால், விளங்கிக் கொள், அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.எனவே அந்தச் செய்தி தகுதியானதா (என்று ஆய்வு செய்து) சிரமப்படாதே. (நூல்: அல்மவ்லூஆத், பாகம்: 1, பக்கம்: 106)
இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ஹிஜ்ரி 510 ல் பிறந்தவர்கள். அவர்கள் காலத்திலேயே இந்தக் கருத்தை அழுத்தமாக எடுத்துரைத்துள்ளார்கள்.
இந்தக் கருத்தை பல ஹதீஸ் கலை நூல்களிலும் எடுத்தெழுதியுள்ளார்கள். மேலும் இதே கருத்தை வேறு வார்த்தைகளில் எழுதியுள்ளார்கள்.
இட்டுக்கட்டப்பட்ட செய்தியை அறிந்து கொள்ளும் முறைபற்றி குறிப்பிடும்போது
تدريب الراوي - (1 / 276)
عن الخطيب عن أبي بكر بن الطيب أن من جملة دلائل الوضع أن يكون مخالفا للعقل بحيث لا يقبل التأويل ويلتحق به ما يدفعه الحس والمشاهدة
அறிவுக்குப் பொருந்தாமல் இருப்பதும், ஏற்றுக் கொள்ளும் வகைளில் விளக்கம் கொடுக்க முடியாமல் இருப்பதும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளைக் கண்டறிவதற்கான சான்றுகளில் ஒன்றாகும். ஐம்புலன்களும், நேரடி காட்சிகளும் எதை மறுக்குமோ அதுவும் இட்டுக்கட்டப்பட்டதில் சேரும்.
(தத்ரீபுர் ராவீ, பாகம் 1, பக்கம் (276)
அறிவிப்பாளர் சரியாக இருந்தாலும் திருக்குர்ஆனுக்கு முரணாக, அறிவுக்கு பொருத்தமில்லாமல் இருந்தால் அந்தச் செய்தியை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற அடிப்படை விதி நாம் உருவாக்கியது கிடையாது. ஹதீஸ்கலை மேதைகள் உருவாக்கியதுதான் என்பதை மறுக்க முடியாது.